கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு பல்வேறு அரசியல் கருத்துகளை வலியுறுத்தினார்.
பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது.
அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி வாயிலாக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக அரசியல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம்சாட்டிய அவர், இது தேர்தல் நடத்தல் விதிகளை மீறும் செயலாகும் என்றும், இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, பழைய மனுதர்ம கோட்பாட்டை அரசியல் சாசனமாக மாற்ற முயற்சி செய்வதாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தை இந்த நிலைமையிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த கூட்டணி கடந்த 8 ஆண்டுகளாக நீடித்து வருவதாக தெரிவித்தார்.
வடஇந்திய மாநிலங்களில் நடைபெறும் வன்முறைகள், கலவரங்கள் மற்றும் படுகொலைகளை எடுத்துக்காட்டிய அவர், தமிழ்நாடு அமைதியான மாநிலமாகத் திகழ்வதற்கான காரணம் தற்போதைய கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டார். அந்த அமைதி தொடர வேண்டுமெனில் இந்த கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என கூறினார்.
மேலும், உணவு சுதந்திரம் குறித்து பேசும்போது, ஒருவரின் உணவு பழக்கத்தை மற்றொருவர் கட்டுப்படுத்தும் நிலை வட மாநிலங்களில் உள்ளது. மாட்டிறைச்சி வைத்திருந்தால் குற்றம் எனக் கூறி தாக்குதல்கள் நடைபெறுகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என அவர் குற்றம்சாட்டினார்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பாஜக பொய்யான பிரச்சாரம் நடத்தி வருவதாகவும், அதற்காக அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் தொலைக்காட்சியை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கும் அதே மேடையில் பேச வாய்ப்பு வழங்க வேண்டும் அதுவே சமநிலை என்றார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த சண்முகம், திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறும் விஜய், முதலில் தனது கட்சியை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அவரது கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என்றார்.
மேலும், இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஒரு இடத்திலும் வெற்றி பெறாது. தோல்வி பயம் காரணமாக விஜய் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடுவது திமுக கூட்டணியின் வாக்குகளை பிரிப்பதற்காக மட்டுமே. ஆகவே விஜய்க்கு போடும் ஓட்டு, நோட்டாவுக்கு போடும் ஓட்டாகும் என அவர் கடுமையாக விமர்சித்தார்.
இறுதியாக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து, பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் சண்முகம் வேண்டுகோள் விடுத்தார்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment